தமிழ் டைம்ஸ் logo
`தாமரை மலர்ந்துவிட்டது… உங்கள் தயவு எங்களுக்கு தேவையில்லை!’ – முதல்வர் ரங்கசாமியை ஓரம் கட்டும் பாஜக
17 மார்ச், 2026
vikatan
தமிழ்நாடு

`தாமரை மலர்ந்துவிட்டது… உங்கள் தயவு எங்களுக்கு தேவையில்லை!’ – முதல்வர் ரங்கசாமியை ஓரம் கட்டும் பாஜக

`லாட்டரி சார்லஸ் மார்ட்டின் வேண்டாம்’புதுச்சேரி 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியுடன் தேர்தலை சந்தித்த என்.ஆர்.காங்கிரஸ், ஆட்சியைக் கைப்பற்றியது. தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் கறார் காட்டி இடம்பிடித்தது பா.ஜ.க. அந்த தேர்தலைப் போல 2026 சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணியைத் தொடர நினைத்தது பா.ஜ.க. ஆரம்பத்தில் அதற்கு பிடி கொடுக்காமல் இருந்த முதல்வர் ரங்கசாமி, அதன்பிறகு காரைக்காலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பிறகு கூட்டணி தொடர்வதாக அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க-வின் மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, `எங்கள் கூட்டணியில் முக்கியமான கட்சி என்.ஆர்.காங்கிரஸ். அது தவிர பிற கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலை சந்திக்க இருக்கிறோம்.பிரதமர் மோடி, முதல்வர் ரங்கசாமிஅந்த வகையில் ல.ஜ.க எங்கள் கூட்டணிக்குள் வருகிறது. முதல்வர் ரங்கசாமி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகளுடன் பா.ஜ.க 14 தொகுதிகளிலும் போட்டியிடும்" என்று கூறியிருந்தார். ஆனால் அதன்பிறகும் கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை. காரைக்காலில் மத்திய அமைச்சரை சந்தித்த முதல்வர் ரங்கசாமி, `என்னுடைய துறை சார்ந்த மாற்றங்களைச் செய்வதற்குக் கூட, ஆளுநர் மற்றும் அதிகாரிகளின் ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டியிருக்கிறது. மாநில அந்தஸ்துக்காகவே ஆரம்பிக்கப்பட்ட கட்சி என்.ஆர்.காங்கிரஸ். அதனால் தேர்தலுக்கு முன்பே அதுகுறித்து நீங்கள் அறிவிக்க வேண்டும். அத்துடன் `லாட்டரி' ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கூட்டணிக்குள் வருவதில் எனக்கு விருப்பமில்லை' என்று தெரிவித்திருந்தார்.`நம்மையே ஓரம் கட்ட நினைக்கிறார்கள்...’அதற்கு, `புதுச்சேரி வரும் பிரதமர் மாநில அந்தஸ்துக்கு நிகரான அதிகாரங்களை அறிவிப்பார். மற்றபடி சார்லஸ் உங்களுக்கு உதவியாகத்தான் இருப்பார்' என்று பதில் கூறி அனுப்பி வைத்தார் அமித் ஷா. ஆனால் புதுச்சேரி வந்த பிரதமர் அதுகுறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதில் கடுப்பான முதல்வர் ரங்கசாமி, பா.ஜ.க-வுடனான தொகுதி உடன்பாடு குறித்த பேச்சைத் தவிர்த்து வந்தார். இந்த நிலையில்தான் புதுச்சேரியில் ஏப்ரல் 9-ம் தேதி வாக்குப்பதிவு என்று அறிவிப்பு வெளியானது. அத்துடன் மார்ச் 16-ம் தேதி தொடங்கும் மனு தாக்கல் 23-ம் தேதி முடிவடையும் என்றும் அறிவித்தது தேர்தல் ஆணையம். நாட்கள் மிகவும் குறைவாக இருப்பதால், தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் வேகம் காட்டி வருகின்றன அரசியல் கட்சிகள்.பா.ஜ.க தேர்தல் குழுஇந்த நிலையில் நேற்று இரவு ஏனாமில் இருந்து திரும்பிய முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு கொறடா ஏ.கே.டி ஆறுமுகம், என்.ஆர்.காங்கிரஸ் பொதுச் செயலாளர் என்.எஸ்.ஜே ஜெயபால் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை செய்தார். அப்போது, `மாநில அந்தஸ்து பா.ஜ.க-வினர் வாயைத் திறக்கவில்லை. கூட்டணியில் `லாட்டரி' சார்லஸ் குரூப் வேண்டாம் என்று நாம் வெளிப்படையாகக் கூறியும், அவர்கள் மௌனமாக இருக்கிறார்கள். இந்த முறை மாநில அந்தஸ்து குறித்த அறிவிப்பு இல்லாமல் தேர்தலை எதிர்கொண்டால் மக்கள் நம்மை நம்ப மாட்டார்கள். நம் மூலமாக புதுச்சேரியில் காலூன்றிவிட்டு நம்மையே ஓரம் கட்ட நினைக்கிறார்கள். `லாட்டரி' மார்ட்டின் குரூப்தான் பா.ஜ.க-வுக்கு முக்கியம் என்றால் நாம் தனித்துப் போட்டியிடுவோம். மக்கள் உண்மையை தெரிந்து கொள்ளட்டும்' என்று புலம்பித் தீர்த்திருக்கிறார்.`முதல்வரை மாற்றுவதுதான் திட்டம்...’அதைக் கேட்டுக் கொண்ட நிர்வாகிகள், இரவு சுமார் 10.30 மணியளவில் காமராஜ் சாலையிலுள்ள தனியார் விடுதியில் பா.ஜ.க - என்.ஆர்.காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். மத்திய அமைச்சர் மான்சுவிக் மாண்டவியா தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமியின் அதிருப்தியை என்.ஆர்.காங்கிரஸ் தேர்தல் குழு தெரிவித்தனர். அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க தரப்பினர், `எங்களுக்கு ஜோஸ் சார்லஸ் மார்ட்டினும், லட்சிய ஜனநாயகக் கட்சிதான் முக்கியம். புதுச்சேரியில் தாமரை மலர்ந்து விட்டது. உங்கள் தயவு எங்களுக்குத் தேவையில்லை. உங்கள் விருப்பத்திற்கெல்லாம் நாங்கள் வர முடியாது. விருப்பமில்லை என்றால் கூட்டணியை விட்டு நீங்கள் வெளியேறலாம்' என்றனர். அதற்கு, `நாங்களும் அந்த முடிவில்தான் இருக்கிறோம். என்.ஆர்.காங்கிரஸ் எங்களுடன் இல்லை என்று நீங்களே அறிவித்துவிட்டு தேர்தலை சந்தியுங்கள்.மக்கள் யார் பக்கம் நிற்கிறார்கள் என்பது அப்போது தெரியும்' என்று ஆவேசமாகக் கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்கள் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர். இதுகுறித்து நம்மிடம் பேசிய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், ``ல.ஜ.க-வை ஏ.டி.எம் ஆகப் பார்க்கிறார்கள். அதனால்தான், `முதல்வர் ரங்கசாமி தயவு எங்களுக்கு தேவையில்லை என்று கூறுகிறார்கள். கூட்டணியில் இரண்டு சீட்களை வாங்கிக் கொண்டு, அவர் ஏற்கெனவே வளைத்து வைத்திருக்கும் சுயேச்சை எம்.எல்.ஏ-க்களை தனியாக நிறுத்த திட்டமிட்டிருக்கிறார் லாட்டரி சார்லஸ். அதன்பிறகு ரங்கசாமியை முதல்வர் பதவியில் இருந்து இறக்குவதுதான் பா.ஜ.க-வின் பிளான். அப்படி ஒரு கூட்டணி தேவையில்லை என்பதில் முதல்வர் ரங்கசாமி தெளிவாக இருக்கிறார். ல.ஜ.க-வை கூட்டணியில் வைத்துக் கொண்டு 30 தொகுதிகளில் கூட பா.ஜ.க போட்டியிடட்டும். அவர்களை எதிர்கொள்வதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம்" என்கிறனர். மோடி அடித்த பல்டி... முகம் கறுத்த ரங்கசாமி... சிக்கலில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி!

இந்த கட்டுரை vikatan ஆல் வெளியிடப்பட்டது மற்றும் தமிழ்நாடு செய்திகளை உள்ளடக்கியது.