தமிழ் டைம்ஸ் logo
NEET RESULT 2026 : நீட் தேர்வில் கெத்து காட்டிய தமிழகம்! தமிழக அளவில் முதலிடம்... இந்திய அளவில் 12-வது இடம்; விழுப்புரம் மாணவர் சாதனை..
17 ஜூலை, 2026
abplive
வணிகம்

NEET RESULT 2026 : நீட் தேர்வில் கெத்து காட்டிய தமிழகம்! தமிழக அளவில் முதலிடம்... இந்திய அளவில் 12-வது இடம்; விழுப்புரம் மாணவர் சாதனை..

விழுப்புரம் : இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வில் விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவர் தமிழக அளவில் முதலிடமும், இந்திய அளவில் 12ஆம் இடமும் பிடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார். இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவு மறுத் தேர்வின் முடிவுகளைத் தேசிய தேர்வு முகமை (NTA) நேற்று நள்ளிரவு வெளியிட்டது. இத்தேர்வில் விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவர் வெங்கடபதி வேலாயுதம், தமிழக அளவில் முதலிடமும், இந்திய அளவில் 12-வது இடமும் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். விழுப்பரத்தைச் சேர்ந்த பிரபல எலும்பு மூட்டு சிகிச்சை மருத்துவர் அஞ்சன் ராமச்சந்திரநாத்தின் மகனான வெங்கடபதி வேலாயுதம், சென்னை பொன்னேரியில் உள்ள வேலம்மாள் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்றவர். இவர் இத்தேர்வில் 720க்கு 705 மதிப்பெண்களையும், கட் ஆப் அடிப்படையில் 99.99915 சதவீத மதிப்பெண்களையும் பெற்று, தென்னிந்திய அளவில் அசத்தியுள்ளார். தேசிய அளவிலான சாதனைகள்: தேசிய அளவில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆர்யன் குப்தா மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த பன்சூல் பன்சால் ஆகிய இரு மாணவர்கள் 720க்கு 715 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரை வேங்கடாபதி வேலாயுதம் முதலிடம் பிடித்த நிலையில், மாநிலத்தைச் சேர்ந்த இதர மாணவர்களும் தேசிய தரவரிசையில் முத்திரை பதித்துள்ளனர்: சுடர் – 45-வது இடம் சபரி – 59-வது இடம் ஜெய் கிருஷ்ணா – 75-வது இடம் சாம்விதா (மாணவி) – 82-வது இடம் நவீதனா – 88-வது இடம் ஜனனி ஸ்வேதா – 112-வது இடம் ரோகித் மேத்யூ – 115-வது இடம் மற்றொரு ஜெய் கிருஷ்ணா – 134-வது இடம் தேர்வுப் புள்ளிவிவரங்கள்: இந்தியாவில் 551 மையங்கள் மற்றும் வெளிநாடுகளில் 14 இடங்கள் என மொத்தம் 5,440 தேர்வு மையங்களில் சுமார் 20 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதினர். இதில் மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் உள்ளிட்ட படிப்புகளுக்காக மொத்தம் 11.21 லட்சம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். பெண்களின் ஆதிக்கம்: 13 மொழிகளில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 58 சதவீதம் பேர் மாணவிகள் ஆவர். வயது மற்றும் முதல் முயற்சி: 17 முதல் 19 வயதுடைய தேர்வர்களே அதிக மதிப்பெண்களைக் குவித்துள்ளனர். முதன்முறையாகத் தேர்வை எழுதியவர்களில் 93 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். மதிப்பெண் வாரியான விவரங்கள்: 690-க்கும் அதிகமாக: 138 மாணவர்கள் 700-க்கும் அதிகமாக: 19 மாணவர்கள் 650-க்கும் அதிகமாக: 1,492 மாணவர்கள் 600-க்கும் அதிகமாக: 10,160 மாணவர்கள் 500-க்கும் அதிகமாக: 90,780 மாணவர்கள் மாநிலங்கள் மற்றும் சமூகப் பிரிவு வாரியான தேர்ச்சி:மாநில அளவில் உத்தரப் பிரதேசத்தில் இருந்து அதிகபட்சமாக 1.7 லட்சம் பேரும், லட்சத்தீவில் இருந்து குறைந்தபட்சமாக 43 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, பீகார் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் 705-க்கும் அதிகமான மதிப்பெண்களுடன் தேசிய அளவில் முதல் 17 இடங்களுக்குள் வந்துள்ளனர். சமூகப் பிரிவுகளின் அடிப்படையில் பொதுப் பிரிவில் 2.91 லட்சம் பேரும், பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 5.12 லட்சம் பேரும், எஸ்சி பிரிவில் 1.59 லட்சம் பேரும், எஸ்டி பிரிவில் 63,716 பேரும், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவில் (EWS) 95,026 பேரும் இத்தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவக் கனவை நோக்கித் தங்களது அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளனர்.

இந்த கட்டுரை abplive ஆல் வெளியிடப்பட்டது மற்றும் வணிகம் செய்திகளை உள்ளடக்கியது.