
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
2026-2027 ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 4 லட்சத்தைக் கடந்து 4,23,955 ஆக உள்ளது என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், புதிதாகச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுவரை ஒட்டுமொத்தமாக 4,23,955 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளதாகத் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 2026-2027 ஆம் கல்வியாண்டில், குறிப்பாக தொடக்க கல்வித் துறையில் 1 ஆம் வகுப்பு - 2,94,209 2 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை - 88,515 ஆக மொத்தம்- 4,23,955 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர் கடந்த சில ஆண்டுகளாக மார்ச் 1ஆம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கோடை விடுமுறைக்கு முன்பாகவே மார்ச் மாதத்தில் தொடங்கிய மாணவர் சேர்க்கை முகாம், பள்ளிகள் திறக்கப்பட்ட பின்பும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வீடு வீடாகச் சென்று நடத்திய விழிப்புணர்வுப் பிரச்சாரத்திற்கு தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளது. எந்தெந்த வகுப்பில் எவ்வளவு? பள்ளிக் கல்வித்துறை தரவுகளின் அடிப்படையில், தொடக்கக் கல்வியான ஒன்றாம் வகுப்பில்தான் பெற்றோர்கள் அதிக அளவில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்துள்ளனர். ஒன்றாம் வகுப்பு: அதிகபட்சமாக சுமார் 2 லட்சத்து 94 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் சேர்ந்துள்ளனர். 2 முதல் 8ஆம் வகுப்பு வரை: தொடக்கக் கல்வி முதல் நடுநிலைக் கல்வியான 8ஆம் வகுப்பு வரை 88,000-க்கும் அதிகமான மாணவர்கள் இணைந்துள்ளனர். பிற வகுப்புகள்: மீதமுள்ள சேர்க்கையானது எல்.கே.ஜி, யு.கே.ஜி (அங்கன்வாடி இணைந்த பள்ளிகளில்), வகுப்புகளைப் பொறுத்தவரை 41,231 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். காரணம் என்ன? கடந்த சில ஆண்டுகளாகவே அரசுப் பள்ளிகளை நோக்கி வரும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதற்குத் தமிழக அரசின் திட்டங்களே முக்கியக் காரணம் எனலாம். குறிப்பாக, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், உயர் கல்விக்குச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கான 'புதுமைப் பெண்' மற்றும் 'தமிழ்ப் புதல்வன்' திட்டங்கள், தொழில்முறை மற்றும் மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு போன்றவை ஏழை, நடுத்தரப் பெற்றோர்களை அரசுப் பள்ளிகள் பக்கம் ஈர்த்துள்ளன. மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வருவதால், வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கட்டுரை abplive ஆல் வெளியிடப்பட்டது மற்றும் கல்வி செய்திகளை உள்ளடக்கியது.