தமிழ் டைம்ஸ் logo
கேன்சர் ஆபத்து..! "கெமிக்கல், கல்லு வெச்சா.. " மாம்பழ வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை வார்னிங்
31 ஜூலை, 2026
abplive
உணவு

கேன்சர் ஆபத்து..! "கெமிக்கல், கல்லு வெச்சா.. " மாம்பழ வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை வார்னிங்

Mango Chemical: மொத்த மற்றும் சில்லறை விற்பனைக்கடைகளில் மாம்பழங்கள் ரசாயனம் பயன்படுத்தி செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுகிறதா? என ஆய்வு மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாம்பழ சீசன் மாம்பழம் சீசன் காரணமாக பல்வேறு வகையான மாம்பழங்கள் கோடைகாலத்தில் அதிகளவு விற்பனைக்கு வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மாம்பழங்களை விரும்பி சாப்பிடுவது வழக்கம். அதேநேரத்தில் இயற்கையாக பழுக்காத மாம்பழங்களை, லாப நோக்கில் சில வியாபாரிகள் கல் வைத்தும், சில ரசாயானங்களை பயன்படுத்தியும் பழுக்க வைத்து விற்பனை செய்வதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனையறிந்த உணவு பாதுகாப்பு துறை, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில், செயற்கை முறையில் ரசாயன பொருட்கள் பயன்படுத்தி மாம்பழங்களை பழுக்க வைக்கக்கூடாது என  எச்சரித்துள்ளது. மாம்பழங்கள் அதிக லாபத்துக்காக விற்பனை செய்வதற்கு ரசாயன முறையில் மாம்பழம் பழுக்க வைக்கப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு துறை வார்னிங் உணவு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ மாம்பழ விற்பனையாளர்கள் இயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்களை மட்டும் விற்பனை செய்ய வேண்டும். வரும் நாட்களில் தொடர் ஆய்வு மேற்கொள்ளப்படும் அப்போது, ரசாயன முறையில் மாம்பழங்கள் பழுக்க வைத்து விற்பனை செய்தால், அவை பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு 5000ரூபாய் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியாக இதே முறைகேட்டில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு கடையின் உணவு பாதுகாப்புத்துறை உரிமம் ரத்து செய்யப்படும்” எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  பின் விளைவுகள் என்ன? கல்/ரசாயனம் (Calcium Carbide) வைத்துப் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள்  செயற்கையானவை. உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. குறிப்பாக அந்த பழங்கலை உண்பவர்களுக்கு வயிற்று வலி, வாந்தி, அலர்ஜி போன்ற ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படலாம். கார்பைட் கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட பழங்கங்களை உண்பதால் அதிகபட்சமாக புற்றுநோய், நரம்புமண்டல பாதிப்பு போன்ற சிக்கல்களையும் எதிர்கொள்ள நேரிடலாம். ஆபத்துகளை தவிர்க்க கடைகளில் வாங்கிய மாம்பழங்களை உப்பு நீரில் குறைந்தது 1-2 மணிநேரம் ஊறவைத்து, பின் நன்கு கழுவிப் பயன்படுத்தவும். பழங்களை நன்றாகத் தேய்த்துக் கழுவி, தோலை நீக்கிவிட்டு உண்ணவும். கல் வைத்த மாம்பழத்தை கண்டறியும் வழிகள்: தோல் நிறம்: செயற்கையாகப் பழுத்த பழங்கள் அதிக மஞ்சள் நிறத்துடனும், பச்சைப் புள்ளிகள் இல்லாமலும், பளபளப்பாகவும் இருக்கும். வாசனை: இந்த பழங்களில் மாம்பழத்திற்கே உரிய நறுமணம் இருக்காது. சில சமயம் கெமிக்கல் வாசனை வீசும். அழுத்திப் பார்த்தல்: பழத்தின் காம்புப் பகுதி கருப்பாகவும், அழுத்தும்போது அந்த இடம் மட்டும் மென்மையாகவும் இருக்கும். தன்மை: பழம் உள்ளே நார் இல்லாமலும், சுவை குறைந்தும் இருக்கலாம். 

இந்த கட்டுரை abplive ஆல் வெளியிடப்பட்டது மற்றும் உணவு செய்திகளை உள்ளடக்கியது.