
ரூ.3.க்கு நாமக்கல் முட்டை.. குறைந்த விலைக்கு முட்டை வாங்கிய பொதுமக்களுக்கு அதிர்ச்சி !
சிவகங்கையில் அழுகிய முட்டைகள் விற்பனை: குறைந்த விலைக்கு வாங்கிய பொதுமக்கள் வேதனை. குறைந்த விலையில் நாமக்கல் முட்டை நாமக்கல் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டதாக கூறி, சிவகங்கை நகராட்சியில், பல்வேறு பகுதிகளில் வண்டிகளில் முட்டைகள் விற்பனை செய்யப்பட்டதாக தெரிகிறது. ஒரு முட்டை ரூ.3 முதல் ரூ.4 வரை குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடைகளில் ரூ.6 முதல் ரூ.7 வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது. குறைந்த விலை காரணமாக பொதுமக்கள் 30 முதல் 50 முட்டைகள் வரை வாங்கிச் சென்றுள்ளனர். ஆனால், மறுநாள் பயன்படுத்த முயன்றபோது பல முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததாகவும், துர்நாற்றம் வீசியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். மேலும், சில முட்டைகள் சிறிய அளவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. கெட்டுப்போன முட்டை சிவகங்கை மேலூர் சாலையைச் சேர்ந்த கட்டிட பொறியாளர் விக்னேஷ் (30) என்பவர் 30 முட்டைகள் வாங்கியதாகவும், பின்னர் அவற்றை வேகவைத்தபோது கெட்டுப்போனது தெரியவந்ததாகவும் கூறினார். இந்த முட்டைகள் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டியவை ஆக இருக்கலாம் என்றும், தற்போது பள்ளிகள் விடுமுறையில் இருப்பதை பயன்படுத்தி வெளியில் விற்பனை செய்யப்படுகிறதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய முட்டைகள் பொதுமக்களுக்கு ஏன் விற்பனை செய்யப்படுகின்றன என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடும் வெயில் காலம் என்பதால் உணவுப் பொருட்கள் விரைவில் கெட்டுப்போகும் மேலும், கடந்த சில நாட்களாக உணவகங்களில் உணவுத்துறை அதிகாரிகள் சோதனைகள் நடத்தப்படவில்லை என்றும், கடும் வெயில் காலம் என்பதால் உணவுப் பொருட்கள் விரைவில் கெட்டுப்போகும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது. இதனால், முட்டை விற்பனையாளர்கள் மற்றும் உணவகங்களில் தீவிர சோதனைகள் நடத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உடனடி ஆய்வு மேற்கொண்டு, தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கட்டுரை abplive ஆல் வெளியிடப்பட்டது மற்றும் உணவு செய்திகளை உள்ளடக்கியது.